ருத்ரன் பாலாவின் கதாபாத்திரம். அவர் அவனை முழுமையான விடுதலையை நெருங்கும் ஒரு முழுமையான மனிதனாகவே உருவகித்திருக்கிறார். ஆனால் அவனுக்குள் ஒரு சிறு துளி — மிகமிகமிகச் சிறிய ஒரு துளி — பற்று அம்சவல்லி மேல் இருந்திருக்கலாம். அதை அறுப்பதன் மூலம் அவனும் விடுதலை அடைகிறான். ஒரு அகோரி தனக்குள் மிக ஆழத்தில் உறையும் பெண் வடிவைக் கண்டு அதை எரித்தழித்து அந்த விபூதியுடன் தன் முக்தி நோக்கி செல்கிறான். அது அவளுக்கும் விடுதலையாக அமைகிறது. பாலா சொல்லவந்தக் கதை அவ்வளவே. அவனால் அவளும், அவளால் அவனும் பெறும் விடுதலை. அதுதான் இந்தப்படத்தின் மையமே.
இடைவேளைக்காட்சியில் அவன் அவளை முதலில் பார்க்கும்போதே அவன் கண்களில அதை உணர்ந்துகொண்டதை பாலா காட்டுகிறார். அந்த அதிர்ச்சி. அவன் தன்நை அங்கே சொல்லும் இடம். தான் அங்கே தன் குருவால் அனுப்பப்பட்டதற்கான காரணத்தை ருத்ரன் அப்போது உணர்கிறான். அந்த காட்சியில் அதை பல கோணங்களில் அவன் சொற்கள் வழியாக பாலா உணர்த்துகிறார். ஆனால் அதிகமாகச் சொல்லக்கூடாது , அது பூடகமாகவே இருக்க வேண்டும் என்றும் பாலா நினைத்தார். சொல்லிவிட்டால் பலம் குறைந்துவிடும் என்று எண்ணினார்.
ஆனால் அதை மிக தெளிவாக பின்னணி இசையில் இளையராஜா சொல்கிறார். சொல்லப்போனால் பின்னனி இசை கதையையே அங்கே சொல்லி விடுகிறது. இன்னும் மேலே சென்று அடுத்த காட்சி மேலும் அதை விளக்குகிறது. ருத்ரன் அன்றிரவே சுடைலைக்குப் போய் பிணம் எரியும் சாம்பலை எடுத்துப் பூசிக்கொண்டு நர்த்தன வடிவில் — காலபைரவனாக நிற்கிறான்.
அதற்குக் காரணம் அம்சவல்லி மீது ருத்ரன் கொண்ட ஈர்ப்புதான். அதை அவனே கண்டு அஞ்சுகிறான். குற்றவுணர்ச்சி கொள்கிறான். அதிலிருந்து மீண்டு செல்ல நினைக்கிறான். அவன் ஏன் அன்றே சுடலைக்குச் செல்ல வேண்டுமென யோசித்தால் அவன் அகமனதை ரசிகன் காணமுடியும். அங்கே ஏன் இசை அதிர்ந்து அதிர்ந்து சோகமும் கொந்தளிப்பும் கொள்கிறது, ஏன் அப்படி மன்றாடுகிறது என்று எண்ணினால் பிறகு எதுவுமே ரகசியம் அல்ல. ருத்ரன் அறுக்கும் பந்தம் அந்த ஈர்ப்புதான். விட்டுவிட்டு வா என்று குரு சொன்னது அவனுள் மிக ஆழத்தில் ஒரு விதைபோல இருந்த அந்த பெண் வடிவைத்தான். ‘நான்கடவுளை‘ புரிந்துகொள்ள முக்கியமான காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டாலே போதும்.
இந்த மையம் மிகமிகப் பூடகமாக மட்டுமே இருக்க வேண்டும் அப்போதுதான் படத்தின் முடிவு வலிமையாக இருக்கும் என்று பாலா எண்ணினார். அங்கே இடைவேளைவிடுவதனால் அது முக்கியமான இடம் என்றும் ஆகவே அந்தக் காட்சிகளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ரசிகன்ப் எண்ணுவான் என்றும் நினைத்தார் உண்மையில் புரியாமல்போய்விடும் என்று அஞ்சியது நான்தான் . பெரும்பாலும் புரிந்துகொள்ளப்படவும் இல்லை.